Wednesday, January 27, 2010

இலங்கை தேர்தலில் அமோக வெற்றி மீண்டும் அதிபர் ஆகிறார்!


இலங்கை தேர்தலில் 14 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அதிபர் ராஜபக்சே முன்னிலையில் உள்ளார். அவரது வெற்றி உறுதியாகிவிட்டதையடுத்து, நாட்டின் அதிபராக 2-வது முறையாக பதவியேற்கிறார். பிற்பகல் நிலவரப்படி, அவரை எதிர்த்து போட்டியிட்ட மாஜி ராணுவ தளபதி பொன்சேகாவுக்கு 24 லட்சம் ஓட்டுகள் கிடைத்துள்ளன. ஆதரவாளர்களுடன் அவர் தங்கியிருக்கும் விடுதியை ராணுவ வீரர்கள் நள்ளிரவில் திடீரென முற்றுகையிட்டதால் பரபரப்பான சூழ்நிலை உருவானது.
இலங்கையில் 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடக்கும். கடந்த 2005ம் ஆண்டு நடந்த தேர்தலில், அப்போதைய பிரதமர் மகிந்தா ராஜபக்சேவும், எதிர்க்கட்சி சார்பில் ரனில் விக்ரமசிங்கேவும் போட்டியிட்டனர். ஐக்கிய விடுதலை முன்னணியை சேர்ந்த சேர்ந்த ராஜபக்சே 48 லட்சத்து 87 ஆயிரத்து 162 ஓட்டுகள் (50.29%) பெற்று வெற்றி பெற்றார். ரனில் விக்ரமசிங்கே 27 லட்சத்து 6 ஆயிரத்து 366 ஓட்டுகள் (47.43%) ஓட்டுகள் பெற்று தோல்வி யடைந்தார். அந்த தேர்தலில் தமிழர்கள் ஓட்டு போடுவதை விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தடுத்ததால் ரனில் விக்ரமசிங்கே தோற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகிந்தா ராஜபக்சே அதிபர் ஆனதும், புலிகளுக்கு எதிரான போரை பல நாடுகளின் உதவியுடன் தீவிரப்படுத்தினார். கடந்த ஆண்டு மே மாதம் நடந்த இறுதிக்கட்ட போரில், புலிகள் இயக்கத்தை அதிபர் ராஜபக்சே முற்றிலும் ஒழித்தார். இதன் மூலம் இலங்கையில் 25 ஆண்டுகளாக நீடித்து வந்த பிரச்னை ஓய்ந்தது. இந்த மாபெரும் வெற்றியால், இலங்கையில் ராஜபக்சேவின் செல்வாக்கு அதிகரித்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்த ராஜபக்சே பதவிக்காலம் முடியும் முன்பே அடுத்த அதிபர் தேர்தலை நடத்தி வெற்றி பெற விரும்பினார். அதன்படியே அதிபர் தேர்தலை அறிவித்தார்.
எதிர்பாராதவிதமாக, ராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா தனது பதவியை ராஜினாமா செய்து அரசியலில் குதித்தார். இவருக்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு கிடைத்தது. புலிகளை ஒழித்ததற்கு காரணம் நான்தான் என இருவரும் தீவிர பிரசாரத்தில் இறங்கினர். ராஜபக்சேவுக்கு வெற்றிலை சின்னமும், பொன்சேகாவுக்கு அன்னப் பறவை சின்னமும் ஒதுக்கப்பட்டது. கடைசி நேரத்தில், பொன்சேகாவுக்கு முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்காவும் ஆதரவு தெரிவித்தார்.
இந்நிலையில், இலங்கையில் நேற்று அதிபர் தேர்தல் நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு மாலை 4.30 மணிக்கு முடிந்தது. மொத்தம் 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாயின. திரிகோணமலை பகுதியில் 50 முதல் 60 சதவீத வாக்குகள், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் 10 சதவீத வாக்குகள் பதிவாயின. தேர்தலை சீர்குலைப்பதற்காக யாழ்ப்பாணத்தில் உள்ள வல்வெட்டித்துறையில் நேற்று அதிகாலை 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதனால் பதற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து தமிழர் பகுதிகளில் ராணுவமும் போலீசாரும் உடனடியாக குவிந்து நிலைமையை சரிசெய்தனர். மற்றபடி, பிரச்னையின்றி வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.
தேர்தல் முடிந்ததும் நேற்று இரவு 7.30 மணிக்கே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதிபர் ராஜபக்சே ஆரம்பம் முதல் முன்னிலை வகித்து வந்தார். பிற்பகல் நிலவரப்படி, அதிபர் ராஜபக்சே 38 லட்சம் ஓட்டுகளும் மாஜி தளபதி பொன்சேகா 24 லட்சம் ஓட்டுகளும் பெற்றிருந்தனர். 14 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் ராஜபக்சே முன்னிலையில் உள்ளார். அவரது வெற்றி உறுதியாகிவிட்டதால், ஐக்கிய விடுதலை முன்னணி தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். முறைப்படி, வெற்றி அறிவிக்கப்பட்ட பிறகு, 2-வது முறையாக நாட்டின் அதிபராக ராஜபக்சே பதவியேற்கிறார்.
இதற்கிடையில், ஆதரவாளர்களுடன் எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகா தங்கியுள்ள ட்ரான்ஸ் ஏசியா விடுதியை சுற்றி நேற்று நள்ளிரவு நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். தேர்தல் முடிந்ததும் ராணுவ வீரர்களைக் கொண்டு தன்னை தீர்த்துக்கட்ட ராஜபக்சே சதி செய்திருப்பதாக அவர் பேட்டியளித்ததாகவும் தகவல்கள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது



0 comments:

Post a Comment | Feed

Post a Comment

இது சம்பந்தமான உங்கள் கருத்தை தெரிவியுங்கள் ...



 

தமிழ் செய்திகள் Copyright © 2009 Premium Blogger Dashboard Designed by SAER